இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சித் சங்கா என்ற 56 வயது பெண், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய சில நாட்களுக்குள் கடுமையான உடல்நல பிரச்சனையை சந்தித்தார். நாய் நாக்கால் ஏற்பட்ட சிறிய கீறல் அல்லது காயம் வழியாக தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் அவருக்கு ஆபத்தான செப்ஸிஸ் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த பிறகு அவர் உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். அடுத்த நாள் காலை அவர் மயக்க நிலையில் இருந்தார். கைகள், கால்கள் மிகவும் குளிர்ந்துவிட்டன, உதடுகள் ஊதா நிறமாக மாறின, சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் அவரது இதயம் ஆறு முறை நின்றது. தொற்று மிகவும் பரவியதால், இரு கால்களையும் முழங்காலுக்கு கீழேவும், இரு கைகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவமனையில் இருந்தபோது அவருடைய திருமண நாள் மற்றும் பிறந்தநாளையும் குடும்பத்துடன் அங்கேயே கொண்டாட வேண்டியதாகிவிட்டது. தற்போது அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். செயற்கை கை, கால் பொருத்துவதற்காக நிதி திரட்டும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி மஞ்சித் சங்கா கூறுகையில், “இதை விளக்கவே மிகவும் கடினம். ஒரு குறுகிய காலத்தில் கைகள், கால்களை இழப்பது மிகவும் வேதனையான விஷயம். இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. யாருக்கும் இது நடக்கலாம்,” என்றார்.

அவரது கணவர் கூறுகையில், “சனிக்கிழமை நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றார். திங்கட்கிழமை இரவு கோமா நிலைக்கு சென்றுவிட்டார். 24 மணி நேரத்துக்குள் இப்படியா நடக்கும் என்று நினைக்கவே முடியவில்லை,” என்றார்.

அவரது இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு ஏராளமானவர்கள் உதவி வரும் நிலையில், செப்ஸிஸ் என்றால் என்ன ? நாய் நக்குவதால் செப்சிஸ் உண்டாகுமா ? என்பது குறித்து கூகிள் மூலம் அதிகம் தேடப்படுகிறது.

செப்ஸிஸ் என்றால் என்ன?

செப்ஸிஸ் என்பது அரிதான ஆனால் மிகவும் ஆபத்தான நிலை. உடலில் ஒரு தொற்று ஏற்பட்டால், சில சமயம் நோய் எதிர்ப்பு முறை அதிகமாக செயல்பட்டு உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளையே தாக்கத் தொடங்கும். அதுதான் செப்ஸிஸ்.

பெரியவர்களிடம் காணப்படும் சில அறிகுறிகள்:

  • தெளிவாக பேச முடியாத நிலை
  • கடுமையான நடுக்கம்
  • மூச்சுத் திணறல்
  • தோல் நிறம் மாறுதல் அல்லது புள்ளிகள் தோன்றுதல்

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

[youtube-feed feed=1]