சென்னை:
தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் கை துப்பாக்கி வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் கையாளப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். ஏன், தற்போது தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது மணல் கொள்ளையர்களை பிடிக்க சென்றார்.
அப்போது மணல் ஏற்றி வந்த லாரி, அமுதாவை இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்றது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டார். இருப்பினும் மணல் கொள்ளையை ஒடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். இவ்வளவு மோசமான மணல் கொள்ளை விவகாரம் மீண்டும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மானாத்தாள் என்ற பகுதி உள்ளது.
இங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் வளைத்து பிடித்தார். அதன்பிறகு கொலை மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தற்காப்பு பயிற்சி தேவைப்படுகிறது.
தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் கிராம நிர்வாகம் என்பது வருவாய் துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் என்பவர் வட்டாட்சியர் தலைமையின் கீழ் செயல்படக் கூடியவர்.
இந்நிலையில் வருவாய் துறை முன்வைத்த கோரிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசின் கூடுதல் செயலாளர் தி.வைதேகி கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பிற்காக கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தமிழக அரசு என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது? உயிருக்கு அச்சுறுத்தலை சந்திக்கும் அரசு அதிகாரிகளுக்கு எத்தகைய மாற்று ஏற்பாடுகளை செய்து தரப் போகின்றனர்? போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.