சென்னை: வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் வேண்டி கடந்த 3 நாளில் 2,300 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய விவகாரம் மாநிலம் முழுவதும் பேசும் பொருளானது. பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்க லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

இதையடுத்து நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.  அதன்படி,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 2,300 பேர் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் வேண்டிய  விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண்டல வாரியாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.