சென்னை: தமிழ்நாட்டில் 1லட்சம் சிலைகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்; வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைப்போம் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
மாவட்டம் வாரியாக சென்று, பாஜக தொண்டர்களை சந்தித்து வரும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டமன்றத்தில் தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுர முத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர், தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். இல்லையென்றால், பாஜக சார்பில் வரும் 10, 11, 12ம் தேதி பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது, அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பாஜக வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. தமிழகத்தில் பாஜகவா..?திமுகவா..? என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என கூறியதுடன், திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி, பாஜக மட்டுமே பொறுப்புகள் உங்களை தேடி வரும். வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் இல்லை, இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.