வடகொரியாவின் தொடர் அணு ஏவுகணை சோதனை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவின் அத்துமீறிய செயலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் பொருளாதார தடையும் விதித்துள்ளது.
வட கொரியாவின் சோதனை காரணமாக தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.
ஐ.நா.சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியாவுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரிய அதிபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தொடர்ந்து வடகொரியா அத்துமீறில் அந்நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா வடகொரியா உள்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதில் அளித்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரியோஸ், அமெரிக்க போர் விமானங்கள் எங்கள் எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்துவோம் என கூறினார்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முதலில் தங்கள் நாட்டின் மீது போர் பிரகடனம் செய்துள்ளார். ஆனால் அவரது மிரட்டல் உலகத்துக்கே தெரியும். இருந்தாலும், அமெரிக்க தாக்கு தல்களில் இருந்து வடகொரியாவை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை எடுப்பதும் அவசியம்.
அதேவேளையில், எங்கள் வான் எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்தால் அதை சுட்டு வீழ்த்துவோம், அதற்கு தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருகிறது.