சென்னை:

டைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் 4 தொகுதிகள் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பரங் குன்றம் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய  அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 3 அதிமுக  எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு என்று கூறியவர்,  சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கியுள்ளனர் என்று கூறினார்.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது இது போன்ற ஒரு உத்தரவு வந்திருந்தால், பல  தமிழக அமைச்சர்கள் இந்த நேரத்தில் சிறைக்கு சென்றிருப்பார்கள் என்றும் கூறினார்.

இனி என்ன செய்தாலும் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என்று கூறியவர், வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட வேண்டியதுதான்,  22 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று  திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்று தெரிவித்தார்.

மேலும்,  மத்தியில் பா.ஜ வெற்றி பெற்றாலும் அதிமுகவுக்கு பலவீனமாகவே இருக்கும் என்றவர், திருப்பரங்குன்றத்தில் அதிமுக டெபாசிட் இழப்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.