ஐதராபாத்: வரியை உயர்த்திய முட்டாள்கள் வரியை குறைக்கட்டும்; எங்களால் முடியாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மே 2020 முதல் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.38.78 உயர்த்தியுள்ளது. தற்போது இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியால்,  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்தியஅரசு குறைத்துள்ளது. அதன்படி,  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசு கலால் வரியை குறைத்த பிறகும் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசுகளை கேட்கக் கூடிய அதிகாரமோ, உரிமையோ மத்திய அரசுக்கு கிடையாது. மேலும் அதன்மீதான வாட் வரியை கூட்டியது நாங்கள் அல்ல, வரியை ஏற்றிய முட்டாள் தான் அதைக் குறைக்கவும் வேண்டும். ஏழை மக்கள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறையும் கருணையும் இருந்தால், செஸ் வரியை நீக்கட்டும். பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். செஸ் லைன் விதிப்பது சாமானியனுக்கு சுமையாக இருக்கும்.பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி முழுமையாக மத்திய அரசு நீக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. எனவே இனிமேல் விவசாயிகள் நெல் நடவு செய்யாதீர்கள் என வலியுறுத்தி உள்ளேன். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நெல்லை நடவு செய்யாதீர்கள் என்று நான் சொன்னதற்கு எதிராக பாஜக தலைவர்கள் போராட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வரை நானும் விடப்போவதில்லை.

தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் எங்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பேசி வருகிறார். பாஜக தலைவர்கள் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தைரியம் இருந்தால் எங்களைத் தொடட்டும்.

இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்