மும்பை

தாம் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை எனவும் பாஜக வாக்களித்தபடி முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடண்டஹ் 14 நாட்களாக அரசு அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.    சிவசேனாவின் இரண்டரை வருட முதல்வர் பதவி கோரிக்கையை பாஜக ஏற்காததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.  இரு தரப்பினரும் பிடிவாதமாக உள்ளதால் எந்த ஒரு முடிவும் ஏற்படாமல் உள்ளது.   இடையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அரசு அமைக்க சிவசேனா முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “எங்கள் கட்சி சுயமரியாதையுடன் இயங்கி வரும் கட்சியாகும்  நாங்கள் பாஜகவை மிரட்டவில்லை.   பாஜக ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இரு கட்சிகளும் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிரித்துக் கொள்ள வேண்டும்  எனவே கேட்டுக் கொண்டுள்ளோம்.    ஆனால் பாஜக தனது வாக்கைக் காப்பாற்றவில்லை

எங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும் நாங்கள் வரவில்லை எனவும் முதல்வர் கூறி வருகிறார்.  தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை.   அவர்கள் எங்களுக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவியை அளிக்க முன்வந்தால் மட்டும் எங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம்.  இல்லையெனில் அழைக்க வேண்டாம்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பவில்லை.   ஆனால் பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.