மும்பை: டெஸ்டில் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி காலமானார். அவருக்கு வயது 86.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் பிறந்தவர் பபு நட்கர்னி. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவர், 1955ம் ஆண்டு நியூசிலாந்துக்கு டெஸ்டில் அறிமுகமானார்.
சிறந்த ஆல் ரவுண்டரான அவர் இந்தியாவுக்காக 41 டெஸ்டில் விளையாடி 1,414 ரன்களும், 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 191 முதல் தர போட்டிகளிலும் விளையாடி 500 விக்கெட்டுகள், 8,880 ரன்களும் குவித்துள்ளார்.
1964ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் வீசியது 32 ஓவர்கள். அதில் 27 ஓவர்கள் மெய்டன் ஆக வீசினார். அதிலும் தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசினார்.
வீசிய அந்த 32 ஓவர்களில் அவர் கொடுத்தது வெறும் 5 ரன்கள் தான். தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்ட இவரது சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
86 வயதான பபு சமீப காலமாக முதுமை சார்ந்த உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் தாக்கம் அதிகமாக மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்களும் உள்ளனர்.
பபு நட்கர்னி மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின், விவிஎஸ் லக்ஷமன் ஆகிய வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.