பெய்ரூட்: லெபனான் தலைநகரில் நடைபெற்ற பெரும் வெடிவிபத்து சம்பவத்தையடுத்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளால், அந்நாட்டு அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களால், இம்மாதம் 4ம் தேதி பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 160 பேர் மாண்டதோடு, சுமார் 6000 பேர் காயமடைந்தனர்.
தற்போது அந்நாட்டில் ஹசன் தியாப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆட்சிக்கெதிராக எழுந்துள்ள கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக, தியாப் அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.
லெபனானில் அடுத்த அரசமைப்பது குறித்த ஏற்பாடுகள் நடந்து முடியும்வரை, தான் பதவியில் தொடரவுள்ளதாக தியாப் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், அவரின் அமைச்சரவைக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பின் காரணமாக இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.