மும்பை: இந்துத்துவா என்றால் என்ன என்பது குறித்து பாரதீய ஜனதா கற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அரசுகளை கவிழ்ப்பதைவிட, நாட்டு பொருளாதாரத்தில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் சாடியுள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.
சிவசனோ கட்சியின் வருடாந்திர தசரா பேரணியில் அவர் பேசியதாவது, “எங்களுடைய இந்துத்துவாவிற்கும், பாரதீய ஜனதாவின் இந்துத்துவாவிற்கும் வேறுபாடு உள்ளது. வெறும் மணியடிப்பது மட்டுமே(கோயில்களின் திறப்பு குறித்து) எங்களின் இந்துத்துவா அல்ல.
பால் தாக்கரேயின் இந்துத்துவா வேறு மாதிரியானது. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழகாக விளக்கியுள்ளார். எனவே, அங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அணியும் தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், மத்திய மோடி அரசோ, மாநில அரசுகளை கவிழ்ப்பதற்குத்தான் முன்னுரிமை தருகிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் ஜிஎஸ்டி அமைப்பு சரியானது அல்ல என்றால், பழைய முறைக்கு மாறுவதே சிறந்தது” என்று பல விஷயங்களைப் பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே.
மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில், உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே குற்றம் சாட்டப்படுவது குறித்தும் அவர் விமர்சித்தார்.
இந்துத்துவா என்பது ஆன்மீக அடிப்படையிலான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் பாரத மண்ணிலுள்ள மதிப்பீட்டு அமைப்பின் ஒட்டுமொத்த செல்வம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது என்று கூறியிருந்தார் மோகன் பகவத்.