சென்னை: முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானா குமரி அனந்தன் உடல் இன்று மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது குமரி   அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலில் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு உள்ளது.

குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், கவர்னர் ரவியும்நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்,  திரையுலகினர் என பல தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குமரி அனந்தன் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது. அவரது மகன் கீதன் இறுதி சடங்குகளை செய்கிறார். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.