இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

72 வயதான சீதாராம் யெச்சூரி நீண்டநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.

அவரது மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “சீதாராம் யெச்சூரி எனது நல்ல நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியாவின் பாதுகாவலராக செயல்பட்டார்.

அவருடன் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்கிறேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

https://x.com/RahulGandhi/status/1834180519333937178

சீதாராம் யெச்சூரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ளார்.

1952 ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் பிறந்தவரான இவர் டெல்லி ஜெ.என்.யு. பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். 1984 இல், அவர் CPI(M) இன் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டார்.

2005ல் மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட யெச்சூரிக்கு 2016 ஆம் ஆண்டு ராஜ்யசபாவில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது வழங்கப்பட்டது.