சென்னை: ராமர் கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முக்கிய நபர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இன்று முற்பகல் 12 மணி அளவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 5.8.2020 அன்று நடைபெறவுள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.