வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரில், கடந்த ஜனவரி மாதம் கலவரத்தைத் தூண்டியதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணை, பிப்ரவரி 9ம் தேதி, அந்நாட்டின் செனட் சபையில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் அணியிலிருந்த பல வழக்கறிஞர்கள் விலகியுள்ளனர்.

கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர் உட்பட, 222 ஜனநாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினர். இதன் விசாரணை பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் மேல் சபையான செனட் அவையில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், டிரம்ப் அணியிலிருந்து முக்கிய வழக்கறிஞர்கள் விலகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரை குற்றவாளியாக்கும் விசாரணைக்கு பதில், அடிப்படை ஆதாரமற்ற தேர்தல் மோசடி வழக்கில் டிரம்ப் கவனம் செலுத்தச் சொன்னதால் இம்முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற்றால், அடுத்தமுறை அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இருப்பினும், குடியரசு கட்சி செனட்டர்கள் டிரம்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக அவர் தவறு செய்துள்ளார் என்று கண்டிக்கலாம் என்று கூறியுள்ளனர். டிரம்புக்கு எதிரான நடவடிக்கை வெற்றி பெற இன்னும் 10க்கும் மேற்பட்ட குடியரசு கட்சி செனட்டர்கள் ஆதரவு தேவை. எனவே, அதற்கு சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.