சென்னை: நீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திமீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பொங்கல் (14ந்தேதி) அன்று நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது சர்ச்சையாகி உள்ளது. நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் கடும கண்டனம் தெரிவித்து வருகின்றன. குருமூர்த்தியின் இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என திமுகவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையின்படியே நடைபெற்று வரும் நிலையில், குருமூர்த்தியின் பேச்சு சலசலப்பை உருவாகி உள்ளது.
இந்த நிலையில, நீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், துக்ளக் ஆண்டு விழாவில் நீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மனு தாக்கல் செய்தால் பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.