டெல்லி: நீட் உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்தி வரும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ன்டிஏ-வை சட்டவிரோதமானது என அறிவிக்க வலியுறுத்தி உள்ளலார்.
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனுவில், ‘தேசிய தேர்வு முகமை தனியார் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மற்றும் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தன்னிச்சையான நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பாதித்துள்ளது. இது, அரசியலமைப்பின் பிரிவுகள் 14 மற்றும் 16 இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புக்கான உரிமையை மீறுவதாக உள்ளது.
தேசிய தேர்வு முகமையின் அமைப்பு மற்றும் செயல்பாடு அரசியல்ரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டு, அதன் நடுநிலைமையை சமரசம் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற JEE முதன்மைத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. இதில் தவறு செய்த 39 விண்ணப்பதாரர்கள் தேர்வில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் தேர்வின் போது ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது போன்ற சம்பவங்கள் தேர்வு முகமையின் நேர்மை மற்றும் நிர்வாகம் குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் இளநிலை தேர்வின் போதும் பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் வினாத்தாள் கசிவுக்கு வழி வகுத்த சம்பவங்கள் உள்பட குறிப்பிடத்தக்க குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வினாத்தாள்களை அங்கீகரிக்கப்படாதவர்கள் அணுகியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது, பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான விதி மீறல்கள் இருப்பதையே காட்டுகிறது. அதே போல் கடந்த 2024 ஆம் ஆண்டு உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கும் தேசிய தகுதித் தேர்வின் போது வினாத்தாள் கசிந்து, தேர்வையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், UGC-NET தேர்வு நடத்தப்பட்ட ஒரு நாளுக்கு பிறகு ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் டார்க்நெட் இணையதளத்தில் கசிந்துள்ளதாக கல்வி அமைச்சகமும் உறுதிப்படுத்தியது.
இதுபோன்ற சர்ச்சைகள், இந்த தேர்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பான தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை கணிசமாக பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் முக்கிய கொள்கை முடிவுகள் விரிவான ஆலோசனையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மேலும் தேசிய தேர்வு முகமை அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அதே போல் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். எனவே தேசிய தேர்வு முகமை இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சட்டவிரோத மானது என்று அறிவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் தனது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.