லக்னோ: இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொண்டுவர உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய் துள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்களை தொகையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.
உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது சீனாவுக்கு அடுத்து, 2வது இடத்தில் உள்ளது. அதுபோல, இந்தியாவில், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலம் உள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் குடும்ப கட்டுப்பாடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மற்றொரு புறம் ஜனத்தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஜனத்தொகை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இந்தாண்டு இறுதியில் அங்கு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதற்காக, மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.