புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு, நாட்டிலுள்ள உயர்நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அவர் மக்களவையில் பேசியதாவது, “நாடெங்கிலுமுள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் இப்போதைக்கு நிலுவையில் உள்ளன. இவற்றில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளவை.
பிரதமர் மோடியின் அரசானது, நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிக்காக 50% அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலுள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 478 நீதிபதிகளை நியமிக்கும் பணி நியமன உத்தரவுகளை வழங்கியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உயர்நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக அம்மாநில அரசால் வைக்கப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பை மாநில அரசு மேம்படுத்தும் பட்சத்தில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என்றார் சட்ட அமைச்சர்.