சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக போதை பொருள் நடமாட்டம், பாலியல் தொல்லைகள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும், நீதிமன்றமும், காவல்துறையை கடுமையாக சாடி வருகிறது. இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
டிஜிபி சங்கர் ஜிவால் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அதில் கலந்துகொண்ட, மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஸ் மோடக், சென்னை காவல் ஆணையர் சார்பில் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக உளவு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி செந்தில் வேலன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் விவகாரங்கள், கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.