டில்லி

டந்த 2019-20 ஆம் ஆண்டில் வங்கி மின்னணு பரிவர்த்தனை 12% உயர்ந்து 4500 கோடி ஆகி உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்து வங்கிகள் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகின்றன.   இதற்காக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு இலக்கை நிர்ணயித்து வருகிறது.  இந்த இலக்கு வங்கிக்கு வங்கி மாறுபட்டு இருந்தது.  இந்த இலக்கை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

கடந்த 2018-19 ஆம் வருடம் மொத்த இலக்காக 3013 மின்னணு பரிவர்த்தனை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3100 ஆக உயர்ந்தது.  இதைப் போல் 2019-20 ஆம் வருடம் இலக்கு 4019 என நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால் மொத்த எண்ணிக்கை 12% உயர்ந்து 4500 கோடியை எட்டி உள்ளது.   அனைத்து வங்கிகளுமே தங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக மின்னணு பரிவர்த்தனை செய்துள்ளது.

இதில் தனியார் வங்கிகளில் அதிக அளவில் ஐசிஐசிஐ வங்கி மின்னணு பரிவர்த்தனை நடத்தி உள்ளது.  இந்த வங்கி அதிக அளவில் வர்த்தக மையங்களில் மின்னணு பரிவர்த்தனை நடத்தி உள்ளது.  இந்த பரிவர்த்தனைகளில் 80% நகர்ப்புறங்களில் நடந்துள்ளது.   இந்த வங்கிக்கு 280 கோடி பரிவர்த்தனைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்  மொத்த பரிவர்த்தனைகள் 115% ஆகி உள்ளன.

இந்த பரிவர்த்தனைகளில் பேடி எம், கூகுள் பே போன்ற செயலிகள் மூலமும் அதிக அளவில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.  குறிப்பாக ஆதார் அட்டை மூலமான மின்னணு பரிவர்த்தனைகள் 2019-20 ஆம் வருடம் அதிகரித்துள்ளன.    தனியார் வங்கிகளில் அடுத்த இடங்களில் மும்பையை சேர்ந்த ஃபினோ பேமெண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை உள்ளன.

இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அதிக அளவில் மார்ச் மாதத்துக்கு முன்பு அதாவது கொரோனா தாக்குதலுக்கு முன்பு நடந்துள்ளன.  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்னணு  பரிவர்த்தனைகள் வெகுவாக குறைந்துள்ளன.