சென்னை: கடந்த ஆண்டு (2021) தமிழ்நாட்டில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர் நாளையுடன் (மே 10ஆம் தேதி) முடிவடைகிறது. மொத்தம் 22நாள்கள் நடைபெறவுள்ள இந்த தொடரில் இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடை பெற்று முடிந்த நிலையில், இன்றும், நாளையும் காவல்துறை, உள்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்களும், அதுதொடர்பான கொள்கை விளக்க குறிப்புகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.
இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட கொள்ளை விளக்க குறிப்பில், தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் 1982 புகார்களும், 2020 ஆம் ஆண்டில் 2025 புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 2421 புகார்களும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமை தொடர்பாக மட்டும் 875 புகார்கள் பதிவாகி உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த சட்டத்தின் படி 2019 ஆம் ஆண்டு 2396 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 3090 புகார்களும், 2021 ஆம் ஆண்டு 4469 வழக்குகளும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 3425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும், கடந்த 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக கூறியிருந்தது. மேலும், கடந்த ஆண்டு, 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும், கடந்த 2020-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்த நிலையில், கடந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.