டிசாவோ, கென்யா

 

கென்யா நாட்டில் ராணி யானை என அழைக்கப்படும் பெண் யானையின் இறுதிப் புகைப்படம் வெளியாகி உள்ளது.

 

கென்யா நாட்டின் டிசாவோ பகுதியில் பல யானைகள் வசித்து வருகின்றன. பொதுவாகவே ஆப்ரிக்க யானைகள் நீண்ட தந்தத்துடனும் மற்ற யானைகளை விட பெரிய அளவிலும் காணப்படும். பல யானைகளுக்கு தரையை தொடும் அளவுக்கு தந்தம் இருக்கும். இதனால் பலர் அந்த யானைகளை வேட்டையாடி தந்தத்தை திருடி உள்ளனர். அதனால் தற்போது இந்த யானைகள் மிக குறைந்த அளவே உள்ளன.

இந்த யானைகளை கென்யா அரசு சிறப்பாக பராமரித்து வருகிறது. இந்த யானைகளில் ஃபிம்யு 1 என பெயரிடப்பட்ட பெண் யானை சமீபத்தில் உடல் நலக் குறைவால் இறந்து போனது. உலகின் நீண்ட தந்தங்கள் கொண்ட யானைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த கம்பீரமான பெண் யானையை அனைவரும் ராணி யானை எனவே குறிப்பிட்டு வந்தனர்.

இந்த ராணி யானை மரணம் அடைவதற்கு சில தினங்கள் முன்பு பிரிட்டனை சேர்ந்த புகைப்பட கலைஞரான வில் புர்ரர்ட் லூகாஸ் புகைப்படங்கள் எடுத்துள்ளார். புகழ்பெற்ற மிருக புகைப்படக் கலைஞரான இவர்  ஆஃப்ரிக்க கரும் சிறுத்தை புகைப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டார். அது போன்ற புகைப்படம் கடந்த நூறாண்டுகளில் முதல் முறையாக வந்துள்ளதாக அனைவரும் புகழ்ந்தனர்.

இது குறித்து லூகாஸ், “இவ்வளவு பெரிய தந்தம் உடைய யானைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் ஒன்றான ராணி யானையை  புகைப்படம் எடுத்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இது போல யானைகள் கொல்லப்பட்டு வரும் நிலையில் யானை ராணி உடல் நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளது. எனவே ராணி யானை என்னும் பெயருக்கிணங்க ராணியாகவே மரணம் அடைந்து இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.