விமானங்களைத்  தாங்கி சென்ற ஐ.என்.எஸ். விராத் கப்பலின்  கடைசி பயணம்.

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.விராத் கப்பலுக்குக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு கொடுக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த விமானம் தாங்கி  கப்பலான ஐ.என்.எஸ். விராத், முதலில் பிரிட்டிஷ் கப்பல் படைக்குச் சொந்தமாக இருந்தது.

 1984 ஆம் ஆண்டு அதனை இந்தியா வாங்கி, 87 ஆம் ஆண்டில் இந்தியக் கப்பல் படையில் சேர்த்துக் கொண்டது..

ஆயிரத்து 500 பேர் பயணிக்கும் வசதியுள்ள இந்த கப்பலுக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு கொடுக்கப்பட்டு மும்பை கப்பல் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டது.

இதனைச் சிறு சிறு பாகங்களாக உடைக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் ,அதனை மியூசியமாக பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரின..

பாதுகாப்பு காரணங்களால்,அந்த முயற்சி கைகூடாத நிலையில் கடந்த மாதம் இந்த கப்பல் ஏலம் விடப்பட்டது.

ஸ்ரீ ராம் குழுமம் என்ற நிறுவனம், இந்த கப்பலை உடைத்து, எடுப்பதற்காக 39 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இதையடுத்து, மும்பை துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் பாவாநகர் அருகே ஆலங் என்ற இடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு நேற்று விராத் கப்பல் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.

அங்கு விராத் கப்பல் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப்படும்.

-பா.பாரதி.