நெட்டிசன்:

(முகநூல் பதிவு)

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தபிறகு நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளன. இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, பசு பாதுகாவலர்கள்  என்று வடமாநிலங்களை வாட்டி வதைத்து பிரச்சினைகளை தொடர்ந்து தற்போது மொழி வாரி பிரச்சினையும் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் இந்தியை அலுவல் மொழியாக மாற்றும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதுபோல், நீட் தேர்வு போன்ற அகில இந்திய தேர்வுகள் மூலம் மாநிலங்களையும், மாநில உரிமைகளையும் பறித்து வருகிறது. மாநில மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல்,  மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாநிலங்கள் தோறும் அமல்படுத்த முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

ஏற்கனவே ரெயில்வே, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக திணித்து வரும் நிலையில், தற்போது நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பை ஊக்கப்படுத்த முயற்சித்து வருகிறது.

நாடு முழுவதும் இந்திய அலுவலகம் மொழியாக பயன்படுத்தி, ஆங்கிலத்தை அகற்ற கடந்த 1964ம் ஆண்டே முயற்சி நடைபெற்றது.

ஆனால், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் வாயிலாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் மாநில மொழிகளுடன் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக சட்ட திருத்தம் மேற்கொண்டது. மேலும் மாநில மொழியே அலுவல் மொழி என வரையறுக்கப்பட்டது.

ஆனால், சமீபகாலமாக மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் இந்தி திணிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஊர் பெயர் பலகை இந்தியில் எழுதப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் கர்நாடகாவில் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கிருந்து இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை மாநில மொழிகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கானாவிலும் மாநில மொழியான தெலுங்கு கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.

மாநிலமொழிகளை கற்றுக்கொடுக்காத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்

ஆனால், தமிழகத்திலோ, ஏற்கனவே அண்ணா கொண்டு வந்த இருமொழி கொள்கைகக்கு எதிராக அண்ணா திமுக ஆட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழக கல்வி நிறுவனங்களில் நமது தாய்மொழியான தமிழை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தை இயற்ற மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்கு கோர்ட்டும் பச்சைக்கொடி காட்டி உள்ள நிலையில், தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தலைதாழ்ந்து உள்ளது.

தமிழக அரசின் கையாலாகபோக்கினால், தமிழக மாணவர்களின் உயர் படிப்புகளை கடுமையாக பாதித்துள்ள நீட் தேர்வை கட்டாயப்படுத்தி திணித்துள்ளது. இதுபோன்று மத்திய அரசின் தொடர் தாக்குதல் காரணமாக தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. மக்களின் கொந்தளிப்பான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்கள் மீண்டும் ஒரு மொழி போராட்டத்துக்கு தயாராக வேண்டிய சூழல் நிலவி வருகிறது.