ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், சிறைவாசம் அனுபவிக்கும் 19 மாதங்களில், மொத்தம் 17 மாதங்களை மருத்துவமனையிலேயே கழித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ராஞ்சியின் பிர்ஸா முண்டா மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளில் பல அரசியல் தலைவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பலரும் உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளுடன் அனுமதிக்கப்பட்டு விடுகின்றனர்.

இந்த வரிசையில் மிக முக்கிய உதாரணம் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைசென்ற அவர், இதுவரை மொத்தமும் 2 மாதங்கள்தான் சிறையில் கழித்துள்ளார். மற்றபடி, உடல்நிலையைக் காரணம் காட்டி ஆர்ஐஎம்எஸ் அரசு மருத்துவமனையில் கட்டண வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அத்தகைய வார்டுகளில் குளிர்சாதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உண்டு. இடையில், டெல்லியில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நிலைமை சற்று சீரானவுடன் மீண்டும் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இவரின் உடல்நிலைக் குறித்து பல மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டபோதும், ஒன்றில்கூட இவரின் உடல்நிலை சீராகிவிட்டதாக தகவல் இல்லை. இடையில், இவரின் மூத்த மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பெயிலும் பெற்றார்.

எனவே, சிறை தண்டனை பெற்ற லாலூவின் நாட்கள், மருத்துவமனையில் சகல வசதிகளுடனும் நகர்ந்து கொண்டுள்ளன. பிரபல அரசியல்வாதிகள் சிறை தண்டனைப் பெற்றால், உடல்நலப் பிரச்சினை என்றதொரு அம்சம் அவர்களைக் காப்பாற்றி விடுகிறது என்ற கூற்று லாலுவின் விஷயத்தில் படு உண்மையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.