பாட்னா :
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் இந்த பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி “பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் இரட்டை என்ஜின்கள்” என்று குறிப்பிட்டார்.
“ஆனால் காங்கிரஸ் – ஆர்.ஜே.டி. கூட்டணியோ, இரண்டு பட்டத்து இளவரசர்களின் சிம்மாசனத்தை பற்றி மட்டுமே கவலைப்படும் கூட்டணி” என்று மோடி குற்றம் சாட்டினார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், சிறையில் இருந்தபடி, மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் லாலு “பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் இரட்டை என்ஜின்கள் அல்ல. தொல்லை தரும் என்ஜின்கள் ( NOT ‘DOUBLE ENGINE’- BUT ‘TROUBLE ENGINE’) என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஊரடங்கின் போது பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் தவித்த போது இந்த இரட்டை என்ஜின்கள் எங்கே போய் இருந்தன?” ..என்றும் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
– பா. பாரதி