சபரிமலை வழிப்பாட்டில் பெண்களையும் அனுமதிக்க வலியுறுத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி மாநில அரசின் ஆதரவுடன் சுமார் 640 கி.மீ. தூரத்திற்கு மகளிர் அமைப்பினர் மனித சுவரை அமைத்து போராட்டம் நடத்தினர்.
சபரிமலையில் ஆண்களை போல பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு ஆண் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவ்வபோது போராட்டங்களும் வெடித்தன.
இதன் காரணமாக தரிசனத்திற்கு செல்லும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க கேரள போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதற்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சபரிமலை ஆச்சாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஐயப்ப பக்தர்கள் கேரளா முழுவதும் ஐயப்ப ஜோதி ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சபரிமலை வழிபாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி செயல்படுத்த வலியுறுத்தி மாநில அரசின் ஆதரவுடன் பெண்கள் அமைப்பினர் மகளிர் சுவர் போராட்டம் நடத்தி வருகிறனர். இன்று மாலை 4மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் சுமார் 640 கிமீ தூரத்திற்கு பெண்கள் வரிசையாக நின்று மனித சுவரை அமைத்துள்ளனர். இதில் மாநிலம் முழுவதும் சுமார் 31லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் நடக்கும் மகளிர் சுவர் போராட்டம் சபரிமலை விவகாரம் தொடர்பாகவே நடத்தப்படுகிறது. சபரிமலைக்கு பெண்கள் யாரும் வர வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.