திருப்பதி
நேற்று ரத சப்தமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் குவிந்தனர்.
நேற்று திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ரத சப்தமி விழா மிகவும் விமர்சையாக நடந்துள்ளது. இந்த விழாவையொட்டி பெருமாளைத் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்தனர். வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே பக்தர்கள் பெருமாளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தனர்.
ஆதித்ய ஹிருதயம் மற்றும் சூரிய அஷ்டகம்ஆகியவற்றைத் தேவஸ்தானம் நடத்தும் ஆதரவற்றோர் இல்லமான எஸ் வி பாலமந்திர் பள்ளி மாணவர்கள் இசைத்தனர். அந்த இசைக்கு நடுவே வெங்கடாசலபதி சூரிய பிரபை வாகனத்தில் வந்து அருள் பாலித்தார். அதன் பிறகு வழக்கமான சின்ன சேஷன், கருடர், அனுமன், கற்பக விருட்சம், சர்வ பூபாலன் ஆகிய வாகனங்களில் வந்து பெருமாள் காட்சி அளித்தார்.
மாட வீதிகளில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுக்கு இலவச உண்வுப் பொட்டலங்களும் குடிநீரும் வழங்கப்பட்டது. இதை வாங்க கூட்டம் அலை மோதியது. துணை ராணுவத்தினர் பேட்டரி கார்களில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தி உள்ளனர். மக்கள் இந்த விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யபட்டு இருந்ததாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.