புதுடெல்லி:

‘சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல், மீண்டும் கூறியுள்ளார்.

இந்தியா – சீனா எல்லைப்பிரச்னையில், மத்திய அரசையும், பிரதமர்,நரேந்திர மோடியையும்,காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான, ராகுல், நாள்தோறும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.
‘லடாக்கை சீனாவுக்கு, மோடி தாரை வார்த்து விட்டார்’ என்றும் ராகுல் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஊடக செய்தியை மேற்கோள்காட்டி, ராகுல், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:சீனா ஆக்கிரமித்துள்ளதாக, நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்; இந்தியாவின் நலனுக்காக, அவர்களுடைய குரலை கேளுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இதேபோன்று, ராகுலின்சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான, பிரியங்காவும், சமூக வலைதளத்தில், ஹிந்தியில் செய்தி பதிவிட்டுள்ளார்.