நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், பல மாணவர்களின் அறிவு குறைவாகவே உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், நீட் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தேர்வர்களின் பயோமெட்ரிக்ஸை சரிபார்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைக்கப்போவதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்திட்த்ஹ அவர், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பல மாணவர்களின் அறிவு குறைவாகவே உள்ளது என்று ஹேமந்த் பிஸ்வா தெரிவித்துள்ளார்.
“பல மாணவர்களின் நடைமுறை அல்லது கல்வி அறிவு மிகவும் குறைவாக இருப்பதாக பல பேராசிரியர்கள் எங்களிடம் கூறினர். இந்த விஷயத்தை விசாரிக்க சிறப்புப் பிரிவை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கேட்டுக் கொண்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
பெரும்பாலான நுழைவுத் தேர்வு மையங்கள் தனியார் கல்வி நிறுவனங்களாக உள்ளதாகவும் குறைவான அரசுப் பள்ளிகள் அல்லது கல்லூரிகளே தேர்வு மையங்களாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசிடம் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசுப் பள்ளிகளில் மட்டுமே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது,” என்று அவர் மேலும் கூறினார்.
மாவட்ட ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை மற்றும் கல்வி அமைச்சகத்திடம் மாநில அரசு கோரிக்கை வைக்கும் என்று முதல்வர் கூறினார்.
“மூன்றாவது கோரிக்கை, தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் பயோமெட்ரிக் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மருத்துவ தேர்வு செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.