மடியாசனம் – மழலையர்க் கவிதைகள்
தொகுப்பு 1
பா. தேவிமயில் குமார்
கைத்தட்டல்
கைத்தேர்ந்த
நடிகரைப்போல
கைத் தட்டல் வாங்கியது
நடிக்கத் தெரியாத
குழந்தை, அந்த
மாறுவேடப்போட்டியில்
ஹீரோக்கள்
பேய்களும்,
பிசாசுகளும்,
ராட்சசர்களும்,
ரொம்பவேக்
கொடுத்து வைத்தவர்கள் !
ஆம்…..
அரும்புகளின் கதையில்
அவர்கள் தானே
சூப்பர், டூப்பர்
“ஹீரோக்கள்” !
கதைசொல்லிகள்
குழந்தைகளுக்குக்
கதைசொல்வதே
மகிழ்ச்சியான,
மாத சம்பளமற்ற,
உத்யோகம் என்பதை
யாரறிவார் ?
பொம்மை
பொம்மையை
பார்த்த
பிள்ளை அறியாது
பொம்மைகள்
அவளை
அளவுக்கதிகமாய்
விரும்பியதை !
மிட்டாய்
வண்ண மிட்டாய்
வாங்கித் தரச்சொல்லி
அழுத குழந்தைக்கு
அதே மிட்டாயை
வெள்ளை நிறத்தில்
வாங்கிக்கொடுத்தேன் !
சீ……. நல்லால, என
சிணுங்கியபடியே சென்றது !
முத்தம்
ஆண்டவனே ! நீ,
ஒன்றும், அவ்வளவு
அதிர்ஷ்டசாலியல்ல !
ஏனெனில்
மழலைகளின்
முத்தத்தைப் பெறாத நீ
மகிழ்ச்சியாக
இருப்பதற்கான
வாய்ப்பு குறைவுதான் !
சாமி
கடவுளை
கும்பிடாதவன்
கூட…..
குழந்தையை
“சாமி” என
சந்தோஷமாய்
கொஞ்சுகிறான் !
வேடம்
வேலைப்பளுவால்
வீட்டிற்கு வரும்
தந்தையிடம்,
ஏதோ சொல்ல
எத்தனித்தக் குழந்தை
அமைதியாய்ப் போய்
உட்காரும் போது,
குழந்தைக்
கடவுளாகவும்,
வேலைப்பளு
வேதாளமாகவும்
வேடமிடுகிறது !
ஜல் ஜல்
நடக்கத் தெரியாத
நதியே…..
சல, சலவென ஓடி
சத்தமிடாதே !
சகிக்கவில்லை !
வா……
ஜல், ஜல் என்ற
ஜதியுடன்
நடையிடும்
குழந்தையிடம்
நடக்கக் கற்றுக்கொள்
நல்லவிதமாக !
முடிசூடா அதிகாரம்
தன் தந்தையே
தரணியின்,
மன்னனாக
மதிக்கப்பட்டாலும்,
அவனுக்கே
ஆணையிடும் அதிகாரம்
அவனின்
மகளு(னு)க்கு
மட்டுமே உண்டு !
– பா. தேவிமயில் குமார்