குற்றம்கடிதல்: 12
’கபாலி’ படம் சில விவாதங்களை முன் வைக்கிறது. ஒரு படம் தலித்துகளுக்கான படமா, இல்லையா என்பதை யார் முடிவு செய்யமுடியும்? மாஸ் ஹீரோ சினிமா ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சினிமாவாக இருக்க முடியுமா?
ஒரு படைப்பு பெண்களின் விடுதலை பற்றிப் பேசுகிறதா, இல்லையா என்பதை பெண்கள்தான் முடிவு செய்யத் தகுதியானவர்கள். ஒரு கதை விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதை விளிம்புநிலை மக்கள்தான் முடிவு செய்யமுடியும். தலித் மக்களின் வாழ்க்கை ஆதிக்க சாதிகளுக்குத் தெரியுமா? ஆண்ட பரம்பரைக்குத் தெரியுமா? அவர்களின் துயரங்கள், குமுறல்கள், நுண்ணுணர்வுகளை அவர்கள்தானே அடையாளம் காணமுடியும். அதனால் ஒரு படம் தலித் வாழ்க்கையைப் பேசுகிறதா, இல்லையா என்பதை அந்தத் தலித் மக்கள்தான் முடிவு செய்யமுடியும். அந்த தலித் மக்கள் ’கபாலி, தலித் படம்’ என்று கொண்டாடினால் ஆதிக்க சக்திகளும், மனுவாதிகளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஏன்?
இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா, நேரடியாக இல்லாவிட்டால்கூட அடையாளமாகக்கூட தலித் விடுதலை பற்றிப் பேசியதில்லை. தலித் என்றால் அழுக்கானவர்களாக, படிக்காதவர்களாக, நாகரிகமற்றவர்களாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டனர். அல்லது யார் பின்னாலாவது அடிமையாக, கூலிப்படைகளாக கும்பலாகக் காட்டப்பட்டனர். எப்போதுமே யாராவது குறிப்பாக, கோவில் குருக்கள் அல்லது குருக்கள் வீட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பார்கள். தலித் மக்கள் குணிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருப்பார்கள்.
ஆனால், காபாலியில் ரஜினியின் உடலரசியல் மற்றும் அதுசார்ந்து அவர் உடுத்தியிருக்கும் உடைகள், படம் நெடுகிலும் ஒரு குறியீடாகவே வருகிறது. இன்னும் எங்களை அடிமைகளாக நினைக்காதீர்கள். எங்களுக்கும் முன்னேறும் ஆசை இருக்கிறது. நாங்களும் முன்னேறுவோம் என்று வரம்புமீறுகிறது. எதை செய்யக்கூடாது என்று சொல்கின்றனரோ அதை செய்து பார்க்கும் அரசியலை முன்னெடுக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதை, நாகரீக உடை அணிவதை தங்கள் அரசியலாகக் காண்கிறது. அதுதான் கபாலியின் வசனங்களாக வெளிப்படுகிறது.
தமிழ்ச் சினிமாவில் இதுவரை காலில் செருப்பில்லாமல், முழங்காலுக்கு மேல் வேட்டிகட்டு, துண்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு
”கும்புடுறேன் எஜமான்”
”சரிங்க ஆண்டே”
”உங்க இஷ்டம் ஆண்டே”
என்று சொல்லிக் காலில் விழுந்தவர்கள்,
இன்று முதல் முறையாக கோட், சூட் அணிந்து தலை நிமிர்ந்து ”மகிழ்ச்சி” என்று சொன்னால் மனு வாதிகளின் உள்ளம் கொதிக்கிறது. இதுவரை ’ஆண்டை’ என்று சொல்லிக்கேட்ட காதுகள் ’மகிழ்ச்சி’ என்று கேட்கும்போது அதிர்கிறது.. அதனால்தான் திரும்ப, திரும்ப ‘மகிழ்ச்சி’ என்று கூறிக்கொண்டிருக்கிறார், கபாலி.
இப் பாத்திரத்தை ரஜினி போன்ற உச்சநட்சத்திரம் பேசும்போது அது தீவிர தலித் அரசியலாகிறது.
”நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா…..பிடிக்கலேன்னா சாவுங்கடா…”
”நீ ஆண்ட பரம்பரை டா………நான் ஆளப்பொறந்த பரம்பரைடா…”
“காந்தி சட்டையக்கழற்றியதுக்கும் அம்பேத்கர் கோட், சூட் போட்டதற்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கிறது” என்று தமிழ்ச்சினிமா பேசினால் ஆண்டபரம்பரையின் குடுமிகள் நட்டுக்கொள்ளத்தான் செய்யும்.
இப்போது பராசக்தி (1952) வசனங்கள் ஆளும் சக்திகளிடம் ஏற்படுத்திய அதிவலைகளும் அவர்களது வயிற்றெரிச்சலும் நினைவுக்கு வருகிறது. (பார்க்க எம். எஸ். எஸ். பாண்டியன் எழுதிய Parasakthi: Life and Times of a DMK Film.)
“மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, “தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா…’ என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.
படத்தில் எங்கிருந்து வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘’திண்டிவனம் பக்கத்திலுள்ள கிராமத்தில் பண்ணையடிமையால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தோம்” என்ற பதில் முக்கியமானது.
இந்தப் பதில் கீழத் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பண்ணையடிமை முறையை நினைவுக்குக் கொண்டுவருகிறது. கீழைத் தஞ்சை தலித் விவசாய தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்த வாய்மொழி வரலாறைச் சேகரிக்க அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அப் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் பலரும் சொன்னது: அப்போது பண்ணைகளில் வேலைபார்க்கும் அடிமைகளுக்கு சவுக்கடி, சாணிப்பால் தண்டனை கொடுப்பார்கள். ஒரு நுகத்தடியில் கால்களைப் பிணைத்து வயலில் நாள் முழுவதும் நிற்கவைப்பார்கள். யாராவது அருகில் அவர்களுக்கும் சவுக்கடி, சாணிப்பால் தண்டனை கிடைக்கும்.
இந்த வன்கொடுமையிலிருந்து தப்பித்தால்போதுமென்று பண்னையடிமைகள் அங்கிருந்து தப்பித்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பலில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு செல்வார்கள். (1950வரை நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நடந்தது.) அதனால் பண்ணைகளின் ஏஜண்டுகள் (கங்காணிகள்) நாகப்பட்டினத்தில் நிரந்தரமாக தங்கவைக்கப்பட்டு, தப்பித்துவரும் பண்ணையடிமைகளை பிடித்து, அடித்து, உதைத்து மீண்டும் ஆண்டையிடம் விடுவார்கள். அதையும்மீறி தப்பிச்சுப்போன பண்ணையடிமைகள் மலேயேவில் தோட்டத் தொழிலாளிகளாக ஆனார்கள் என்று கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. இப் பின்னணியை வைத்தே ரஞ்சித் கதையை உருவாக்கியிருக்கலாம்.
‘’யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே.. தின்னுட்டு அமைதியா இருக்கவேண்டியதுதானே.. மத்தது எல்லாம் எதுக்கு நீ செய்ற.. அத செய்றதுக்கு நீ யாரு.. அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா.. உனக்கு என்ன தகுதி இருக்கு… கோட்டு, சூட்டு, கண்ணாடி போடா சமமா ஆயிடுவியா”என்று காபலியைக் கேட்கும்போது தலித் மனதுக்குள் கீழ வெண்மணி முதல் திண்ணியம் வரை ஆயிரம் துயரங்கள் நிழலாடுகின்றன. என்றென்றும் இப்படியே வாழவா படைக்கப்பட்டோம். நாடுவிட்டு நாடு வந்தாலும் துயரம் தீராதா? என்ற மனநிலையில் உருவாக்கப்பட்ட திரைமொழிதான் ”நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…’என்ற பதிலடி வருகிறது.
இதனை ரஜினி என்ற உச்சநட்சத்திரத்தை வைத்து ரஞ்சித் சாதித்துக் காட்டியதுதான் ’அவாள்’களால் தாங்கமுடியவில்லை. மாஸ் ஹீரோவுக்கான படம் இல்லை என்ற விமர்சனத்தை முன் வைக்கிறார்கள். மாஸ் ஹீரோ படம் என்றால் ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காட்டக்கூடாதா? மாஸ் ஹீரோ படம் என்றால் மக்களை மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டுமா? தொப்புளில் ஆமலேட் சுட்டால்தான் மாஸ் ஹீரோ படமா? ”பொம்பளைன்னா பொடவை கட்டிக்கணும்; ஆம்பளைன்னா அவளை அடிக்கணும்.” என்பதுபோன்ற பஞ்ச் டயலாக்குகள் தான் இருக்கணுமா? “மகிழ்ச்சி” என்று சொல்லக்கூடாதா?
தமிழ்ச் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மாஸ் ஹீரோ என்றால் அது ரஜினிதான்! இருவருமே அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்கள், சுயநலம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள். தன்னை அடையாளப் படுத்துவதற்காக பிறரின் அடையாளங்களை அழித்தவர்கள். தான் – ஹீரோ, பிறர் – கும்பல் என்பதுதான் மாஸ் ஹீரோவுக்கான அடையாளம். கதைக்களனுக்காக விவசாயி, படகோட்டி, ஆட்டோக்காரன் என்று இருந்தாலும் ஹீரோ தவிர மற்றவர்கள் கும்பல்தான். இந்தக் கும்பல் மனோபாவத்தை ரஞ்சித் உடைத்திருக்கிறார். அந்த கும்பலுக்கு அடையாளமும் வரலாறும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கும்பலின் ஒருவராக ரஜினி அடையாளம் காட்டப்படுகிறார்.
மாஸ் ஹீரோ கும்பலின் தலைவனாக, அடையாளமற்றவர்களின் தலைவனாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. அவர்களது மண்ணையும் மரபையும் அடையாளம் காட்டும்போது யதார்தத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். அதை ஆளும்கக்திகள் தாங்கமுடியாது. அப்படியானால் அதுதான் அரசியல் படம்.
அதனால்தான் எது தலித் அழகியல், எது மாஸ் ஹீரொ சப்ஜெக்ட் என்று மனுவாதிகள் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ரஞ்சித் ரஜினியை ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள்.
ஆனால் ரஞ்சித் ஏமாற்றவுமில்லை, ரஜினி ஏமாற்றவும் இல்லை. இருவரும் சேர்ந்து தமிழ் சினிமா ரசனையில் மடைமாற்றத்தைத் தொடங்கியுள்ளனர்.
(கட்டுரையாளர் அப்பணசாமி தொடர்புக்கு: Jeon08@gmail.com https://www.facebook.com/appsmoo )