குன்றக்குடி
குன்றக்குடி கோவில் யானை தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குன்றக்குடி சண்முகநாதன் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது. இந்த கோவிலின் யானை சுப்புலட்சுமி. பக்தர் ஒருவரால் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானை என கூறப்படுகிறது. யானையை பராமரிக்க குன்றக்குடி மலை அடிவாரத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது.
திடீரென நேற்று நள்ளிரவில் இந்த கொட்டகையில் தீப்பிடித்ததால். வெப்பம் தாங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் யானை பிளிறியது. யானை ஒரு கட்டத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்துவிட்டது. கோவில் காவலாளி மற்றும் பாகன் உள்ளிட்டோர் ஓடிவந்து பார்ப்பதற்குள் கொட்டகை பெருமளவு எரிந்துவிட்டது. யானைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து யானையை ஆசுவாசப்படுத்தினர். யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்தததால் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காயத்திற்கு மருந்து போடப்பட்டது.
குன்றக்குடி காவல்துறையினர் மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சிகிச்சை அளித்தும், பலனின்றி யானை உயிரிழந்தது. தீ விபத்தில் சிக்கி கோவில் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தினார்.