பெங்களூரு: டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கென்று குறிப்பிட்ட நிலையான 5 மைதானங்களைத் தேர்வுசெய்ய வேண்டுமென்ற விராத் கோலியின் கருத்திற்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ஆதரவளித்துள்ளார்.
பார்வையாளர்களை அதிகளவில் மைதானத்திற்கு ஈர்ப்பதற்காக இதை செய்தாக வேண்டுமென கூறியுள்ளார் கும்ப்ளே.
மேலும், கடந்த 80கள் மற்றும் 90களில் பின்பற்றப்பட்ட முறையையே இப்போது பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளார் அவர். அந்தக் காலகட்டங்களில், குறிப்பிட்ட விழா காலங்களில், குறிப்பிட்ட மையங்களில் டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டு நடத்தப்படும்.
புத்தாண்டு சமயத்தில் கொல்கத்தாவிலும், பொங்கல் சமயத்தில் சென்னையிலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். இதன்மூலம் விடுமுறைகால பார்வையாளர்களை அதிகளவில் மைதானங்களுக்கு ஈர்க்க முடிந்தது.
டெஸ்ட் போட்டிகளை குறிப்பிட்ட மையங்களில் நடத்துவது மட்டுமே பயனளித்துவிடாது; மாறாக, அவற்றை நடத்தும் காலமும் முக்கியமானது. அப்போதுதான் டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் அதிக ரசிகர்களை ஈர்த்து, அதைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறினார் கும்ப்ளே.