சென்னை: சென்னையில் தொழில் வரி 35% உயர்த்தப்பட்டு  இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும்,  கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,  சென்னையில்  தொழில் வரி 35% உயர்த்தப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும்,   அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம், இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது என்று கூறியதுடன், இதுதொடர்பாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 3 உயர் பெண் அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

இந்த விவகாரத்தில்,  உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்று கூறிய இபிஎஸ், கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என கூறியதுடன்,  மத்திய அரசு திட்டமான சாகர்மாலா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்துவதாக இருந்தது, ஆனால்,  கொரோனா காலம் என்பதாலும், சுற்றுச்சூழல் அனுமதி பெற தாமதம் ஆனதாலும் நிறைவேறாமல் போனது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில்,  சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு 35 சதவீத தொழில் வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில்  பதிவிட்டுள்ளார்.

அதில்,  2024-2025 இரண்டாம் அரையாண்டு முதல் தொழில் வரி உயர்வு அமல்படுத்த நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சியில் சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வடபழனி-போரூர் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, என்று அனைத்து முக்கிய சாலைகளுமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அனைத்து முக்கியச் சாலைகளின் நிலையே இப்படியெனில், மாநகரில் உள்ள மற்ற சாலைகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதனால் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடந்தவண்ணம் உள்ளன.

ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகர்கள் என்று சுமார் 75 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.