சென்னை: குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல, பூந்தமல்லி நகரச்செயலாளர்  எம்.ரவிக்குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தலைமைப்பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’ செய்ய வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால்  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு அவ பெயரை ஏற்படுத்திய ரவிக்குமார் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக   தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி நகராட்சி தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியை நிறுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை திமுக தலைமை மாற்றி உள்ளது. அவருக்கு பதிலாக, புதிய செயலாளராக ஆர்.மகேஷ் என்பவரை நியமனம் செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகளும், அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமேன திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.