இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் இந்தியாவை இகழ்வது போன்ற ஒரு வீடியோவை பாகிஸ்தான் அரசு சமீபத்தில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதையடுத்து அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாதவை பார்க்க அவரது மனைவியும், தாயாரும் விரும்புவதாக கூறப்பட்டது. அதையடுத்து, அவர்களை பார்க்க அனுமதிக்க கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது.
அதையடுத்து, கடந்த மாதம் 25-ந்தேதி ஜாதவின் தாய் மற்றும் மனைவி ஆகியோர் அவரை பாகிஸ்தான் சிறையில் சந்தித்தனர்.
அதைத்தொடர்ந்து ஜாதவ் கூறியதாக ஒரு வீடியோவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. அதில் குல்பூஷன் ஜாதவின் வாக்கு மூலம் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
அந்த வீடியோவில் குல்பூஷன் ஜாதவ், இந்தியா மீது குற்றம் சாட்டி இகழ்ந்து பேசுவது போலவும், பாகிஸ்தானை புகழ்வது போன்றும் அவர் பேசியதுபோன்று உள்ளது.
அந்த வீடியோவில், ஜாதவ், இந்திய அரசு, மக்கள் மற்றும் கடற்படைக்கு தெரிவிப்பதற்கான முக்கியமான விஷயம் என்னிடம் உள்ளது என்று கூறி உள்ளார்.
மேலும், நான் இந்திய கடற்படையால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்றும், நான் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றுவதை பற்றி ஏன் நீங்கள் (இந்தியா) பொய் கூறுகிறீர்கள் என்று இந்தியாவுக்கு கேள்வி விடுத்துள்ளார்.
என்னை யாரும் இங்கு சித்திரவதை செய்யவில்ல என்று கூறி உள்ள ஜாதவ், இங்கு நான் நலமுடன் இருப்பதை கண்ட எனது தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றும், என்னை பார்த்ததால் அவருக்கு நிம்மதி கிடைத்ததாக அவர் தன்னிடம் தெரிவித்தார் என்றம் கூறி உள்ளார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியானது ஒரு நேர்மறையான செயல் என்றும், இதன் காரணமாக நானும் எனது தாயாரும் மகிழ்ச்சி அடைந்தோம் என்று கூறி உள்ளார்.
அதே வேளையில், எனது தாயார் என்னை சந்தித்து விட்டு வெளியே சென்றபோது, அவர்களுடன் வந்திருந்த இந்திய தூதரக அதிகாரி எனது தாயை கடிந்துகொண்டதை நான் பார்த்தேன், அப்போது என்னை திரும்பி பார்த்த அவரின் கண்ணில் பயம் இருந்ததையும் நான் கண்டேன் என்று ஜாதவ் அந்த வீடியோவில் பேசியதாக உள்ளது.
இதுகுறித்து பதில் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. ஜாதவிடம் இருந்து வலுக்கட்டாயமாக வீடியோ மூலம் அறிக்கை பெற்று பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது… இது தொடர்ந்து வரும் நடவடிக்கைதான் என்றம், பாகிஸ்தானில் இதுபோன்ற நடவடிக்கைகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள இதுவே தருணம்’ என்று கூறி உள்ளார்.
இந்த வீடியோ வெளியானதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து, இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், குல்பூஷண் ஜாதவிடம் வலுக்கட்டாயமாக இந்த வாக்குமூலத்தை பாகிஸ்தான் பெற்று வெளியிட்டுள்ளது என்றும், குல்பூஷன் ஜாதவை சந்தித்து விட்டு வெளியே வந்தபின் அவரது தாயை இந்திய தூதரக அதிகாரி திட்டுவதை அவரால் எப்படி பார்த்திருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது.
இந்த செய்தி தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.