ரிட்டாபட்டி மலை இம்மலை மதுரை மாவட்டம் மேலூர் செல்லும் வழியில் யானை மலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது.

மதுரைக்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலையை திருப்பிணையன் மலை என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சமணர் காலக் குகைகள் மற்றும் பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.

இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது.

மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது. குடைவரைக் கோயிலின் வெளிப்புறச் சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்தில் காணப்படும் ஒரு லகுலீசர் சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனலாம்.