பெங்களுரூ:
விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை குறிவைத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் வெளியிட்ட சர்ச்சையான பதிவிற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநில தும்காரு நீதிமன்றம் கங்கனா ரனாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் எல் ரமேஷ் நாயக்கின் புகாரின் அடிப்படையில், நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் முதல் வகுப்பு நீதி மன்றம், நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்யயுமாரு கியாதசந்திரா காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிஆர்பிசி யின் பிரிவு 156 (3)ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது, மேலும் இந்த எப்ஐஆர் நகலை கியாதசந்திரா காவல் நிலையம் நீதிமன்றத்திற்கும் அனுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதைப் பற்றி கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி கங்கனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிஏஏ பற்றி தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்தான் தற்போது விவசாய மசோதாவிற்கு எதிராக போராடி வருகின்றனர், இப்போது விவசாய மசோதா குறித்து தவறான தகவல்களை பரப்பி நாட்டில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் தவறான செயல் என்று கருதிய வழக்கறிஞர் எல் ரமேஷ் நாயக் கங்கனா ரனாவத்தை எதிர்த்து வழக்கு பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.