மும்பை: கணக்கில் தெரிவிக்கப்படாத தங்கம் மற்றும் இதர மதிப்புவாய்ந்த பொருட்களை வைத்திருந்த காரணத்தால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யா, மும்ப‍ை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

டிஆர்ஐ எனப்படும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவரைத் தடுத்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமீரக நாட்டில் ஐபிஎல் தொடர் நிறைவடைந்த நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு மும்பை வந்தடைந்தார் குருணால் பாண்ட்யா.

இந்த 2020 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார் பாண்ட்யா. இவர் தொடர்ந்து அந்த அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சீசனில் இவரின் செயல்பாடு சிறப்புக்குரியதாக இல்லை.

மொத்தம் 16 போட்டிகளில் ஆடிய இவர், மொத்தமாக 109 ரன்களை எடுத்ததோடு, 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். ஆனால், கடந்த 2017ம் ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு, மும்பை அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.