சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோயிலில் நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கி.பி. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயரின் இரண்டு செப்பேடு கண்டெடுக்கப்பட்டதாக மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டலப் பிரிவு கல்வெட்டியல் துறை இயக்குநர் முனிரத்தினம் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் நந்தி நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரே வளையத்தில் கோர்க்கப்பட்ட இரண்டு செப்பு இதழ்களில் கிருஷ்ணதேவராயரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் பணிபுரிந்த பிராமணர்களுக்கு கிருஷ்ணதேவராயர், நிலத்தை தானமாக வழங்கிய தகவல் செப்பேட்டில் காணப்படுவதாகக் கூறிய தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.