சென்னை: கொரோனா தொற்று பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு மார்க்கெட் கண்டறியப்பட்டதால், அதிரடியாக மூடப்பட்டது. இந்த நிலையில், சுமார் 145 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மொத்த விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த மே மாதம் 5ந்தேதி அதிரடியாக மூடப்பட்டது. தொடர்ந்து, தற்காலிகமாக காய்கறி சந்தை திருமழிசையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. சென்னையில் தற்போது, கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 18-ந் தேதி முதல் கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 28-ந் தேதி முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்பட்டது.
காய்கறி ஏற்றி வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் கோயம்பேடு சந்தை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. முன்னதாக காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒரு கடைக்கு இரண்டு வாகனங்கள் என்ற வீதத்தில் மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
12 நுழைவுவாயில்கள் கொண்ட கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது 4 நுழைவு வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. நள்ளிரவு முதல் காய்கறி விற்பனை நடந்தது.
ஒவ்வொரு கடைக்கும் வரும் வியாபாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டும் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டது.
நான்கரை மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பூசணிக்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடைகளுக்கு பூஜைகளும் போடப்பட்டன.
தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி வாங்கி செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து வருகிறது. வியாபாரிகள், தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அட்டை வைத்திருப்போர் மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.