சென்னை
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது அப்போது சென்னையில் கொரோனா பரவலின் முக்கிய மையமாக கோயம்பேடு சந்தை கூறப்பட்டது. இதை அடுத்து கோயம்பேடு சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கோயம்பேட்டில் தற்போது இயங்கி வருகிறது.
தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் கட்டமாக அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஆகியோர் இந்த பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் ஒரு கட்டமாக கோயம்பேட்டில் இந்த பணியைக் கடந்த 11 ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
மேலும் இங்கு ஊசி போடவும் சிகிச்சைக்கும் வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இங்குள்ள வியாபாரிகளும் கூலித் தொழிலாளிகளும் தடுப்பூசி போடத் தயக்கம் காட்டி வருகின்றனர். அதே வேளையில் இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்குத் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.