சென்னை: சென்னையில் மெட்ரோ திட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.80.48 லட்சத்துக்கு கையெழுத்தாகியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் கடந்த 2015ஆம் அறிமுகப்படுத்திய மெட்ரோ ரயில் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 54 கிலோமீட்டருக்கு இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கும் நீட்டிக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ பணி முன்மொழியப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோயம்பேட்டிலிருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ இரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் , இந்தியாவில் போக்குவரத்து ஆலோசனை மற்றும் பொறியியல் துறையில் முன்னணியில் நிறுவனம் என M/s RITES நிறுவனம் இடையே கையெபத்தானது. இந்த ஒப்பந்தம் ரூ.80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s RITES நிறுவனத்திற்கு ஜூன் 11ஆம் தேதி வழங்கப்பட்டது. க
இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் இ.ஆ.ப., மற்றும் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் M/s RITES நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த வழித்தடம் முழு நீளத்திற்கும் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. நவம்பர் 2024-க்குள் இதுதொடர்பான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, தோராயமாக 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில்துறை மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.