பாளையங்கோட்டை,

திருநெல்வேலி பாளையங்கோட்டை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம்  அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான முகிலன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில்  காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி உள்ளார்.

ஏற்கனவெ கடந்த மாதம்  சில கோரிக்கைகளை வலியுறுத்தி  ஒருநாள் உண்ணாவிரதம் இருந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டத்தில் பங்கேற்ற அவர்மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு வழக்கை ரத்து செய்யாமல் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில்,  5 கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள 132 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் செம்மணியை சட்ட விரோதமாக வீட்டிலிருந்து தூக்கிச்சென்று, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரோ மையம்குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் பத்திரிகையாளர் அந்தோணி ஜெகன், புதியதலைமுறை செய்தியாளர் ரஜீவ் கிருஷ்ணா, நாகராஜன் ஆகியோர்மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போரடிவரும் பேராசிரியர் த.செயராமன் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக கார்ட்டூனிஸ்ட் பாலா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் கெயில், ஹைட்ரோகார்பன், அணுஉலை, மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை போன்ற வற்றை எதிர்த்து வாழ்வாதாரத்துக்காகப் போராடியவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்.

தாமிரபரணி ஆற்றிலிருந்து கோக், ஃபெஃப்சி ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.

தாமிரபரணியில், கொங்கராய்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய மணல் குவாரிகள் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வை தடைசெய்ய வேண்டும்.