டில்லி
கூடங்குளம் அணு மின் நிலையம் மட்டுமின்றி இஸ்ரோவுக்கும் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் வந்தன. ஆனால் கூடங்குளம் அணு மின்நிலையம் அவ்வாறு எத்தகைய இணையத் தாக்குதலும் நடைபெறவில்லை என தெரிவித்தது. அதே வேளையில் இந்திய அணு மின் கழகம் கூடங்களும் அணுமின் நிலையத்தில் கணினி ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்தது.
இதுகுறித்து ஐ எம் எல் எனப்படும் சைபைர் கிரைம் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, “அணு மின் நிலையத்தில் யுரேனியத்துக்கு பதிலாகத் தோரியம் உலைகள் பயன்படுத்த வட கொரியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்த தோரிய அணு உலை தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. எனவே இந்த தொழில் நுட்பத்தைத் திருட வட கொரியா சென்ற ஆண்டு முதலே முயன்று வருகிறது.” எனத் தெரிவித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல் நடத்திய நபர் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று இஸ்ரோ வின் கணினி விவரங்களைத் திருட முயன்றுள்ளனர். இது குறித்து தேசிய சைபர் கிரைம் தடுப்பு மையம் என்னும் பாதுகாப்பு மையம் கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று இஸ்ரோ மற்றும் இந்திய அணுமின் கழகம் ஆகிய இரு துறைகளுக்கும் எச்சரிக்க விடுத்துள்ளது.
இந்த சைபர் கிரைம் தாக்குதல் நடத்தியவர் வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட கணினியைப் பயன்படுத்தி உள்ளார். அவருடைய ஐபி முகவரி பியாங்யாங் நகரில் இருந்து வந்துள்ளது. இந்த ஹேக்கர்கள் பயன்படுத்திய டி டிராக் வைரஸ் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தென் கொரிய ராணுவ விவரங்களைத் திருட பயன்படுத்தப்பட்டுள்ளது.