உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவது ஏன் ? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், “ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் வரும் 3ம் தேதி தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த உள்ளோம்.
அதேபோன்று தி.மு.க. சார்பில் தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு வந்து தீரன் சின்னமலை நினைவு நாளில் பங்கேற்கிறார். தற்போது அவர் வேலூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எரிவாயு குழாய் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டேன் என்றார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன் என்றார். ஆனால் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதா அரசை எதிர்க்க துணிவில்லாமல் உள்ளது.
உயர் மின் கோபுர திட்டத்தை விவசாயிகள் பாதிக்காத வகையில் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருந்த 37 எம்.பி.க்களை விட தற்போது உள்ள தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியின் கருத்தை கேட்க வேண்டும். முத்தலாக் மசோதா சட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் ஒரு சிலர் ஆதரிக்கிறார்கள் எனினும் இந்த சட்டம் பெண்களைப் பொறுத்தவரை பயனளிப்பதாக இருக்கும்.
கொமதேக பொறுத்தவரை எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி. அவர்களின் நலனுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் போராட தயாராக இருக்கிறோம். விவசாய மக்கள் மற்றவர்களைப் போல் சரிசமமாக வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கொ.ம.தே.க பொறுத்தவரை நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தற்போது நாங்கள் தொடங்கியுள்ளோம். ஈரோடு மாவட்டத்திலும் இந்த பணிகளை நாங்கள் விரைவில் தொடங்க உள்ளோம்.
ஈரோடு மாநகர் பகுதியில் தற்போது பல்வேறு சாலைகள் தோண்டப்படுகின்றன. சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் அவை மூடப்படுகிறது. பின்னர் மீண்டும் அவை தோண்டப்படுகிறது ஏன்? என்று தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது. இதனால் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய பல ஆயிரம் கோடி வராமல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்த வேண்டும். தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன் ? உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார்.