
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 175 ரன்கள் இலக்கை எட்ட முடியாத ராஜஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 என்ற ஒரு கெளரவமான ரன்களைப் பதிவு செய்தது. அந்த அணியின் ஷப்னம் கில், அதிகபட்சமாக 47 ரன்களை அடித்தார்.
பஞ்சாப் நிர்ணயித்த 224 ரன்கள் என்ற இலக்கையே எட்டிப் பிடித்த ராஜஸ்தானுக்கு, 175 ரன்கள் என்பது பெரிய விஷயமாக இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், நேற்று நிலைமை தலைகீழானது.
அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்களிலும், ராகுல் டெவாஷியா 14 ரன்களிலும் அவுட்டாக, டாம் கர்ரன் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடி, 36 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.
அந்த அணியில் மூன்று பேர் மட்டுமே நேற்று இரட்டை இலக்க ரன்களைத் தொட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
கொல்கத்தா அணியின் கம்லேஷ், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Patrikai.com official YouTube Channel