இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும் தீபாவளியைக் கொண்டாடியது.
இந்தியப் பங்குச் சந்தையின் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறியதாக கல்கத்தா பங்குச் சந்தை (CSE) உட்பட நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகள் பலவும் 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் வர்த்தகத்தை நிறுத்தியது.

இதனை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் பல வருட சட்டப் போராட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில் தற்போது பங்குச் சந்தை வணிகத்தில் இருந்து மொத்தமாக வெளியேற கல்கத்தா பங்குச் சந்தை தீர்மானித்தது.
ஏப்ரல் 25, 2025 தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒன்-டைம் பேமெண்டாக ரூ.20.95 கோடி மற்றும் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி சேமிப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்நிறுவனத்தை மூட பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, CSE தனது வெளியேறும் விண்ணப்பத்தை SEBI-யிடம் சமர்ப்பித்தது.

இதையடுத்து 1,749 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் 650 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி வரும் CSE-யின் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது.
CSE வெளியேறுவதை செபி அங்கீகரித்தால், CSE ஒரு ஹோல்டிங் நிறுவனமாகத் தொடரும், இருப்பினும் அதன் துணை நிறுவனமான CSE கேபிடல் மார்க்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட் (CCMPL), NSE மற்றும் BSE இல் தொடர்ந்து வர்த்தகம் செய்யும்.

CSEயின் மூன்று ஏக்கர் EM பைபாஸ் சொத்தை ஸ்ரீஜன் குழுமத்திற்கு ரூ.253 கோடிக்கு விற்பனை செய்வதற்கும் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது, இது செபியின் ஒப்புதலுக்குப் பிறகு தொடரும்.
மரத்தடியில் அமர்ந்துகொண்டு நிறுவனங்களின் பங்குகளை கைமாற்றி விட்டுக்கொண்டிருந்த முகவர்கள் சேர்ந்து ஒரு சங்கமாக உருவெடுத்து 1908ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்தின் கடன் பத்திரங்களை முதல் முதலாக கல்கத்தா ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் (CSE) என்ற பெயரில் விற்பனை செய்யத் துவங்கினர்.
150 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட இந்த பங்கு வர்த்தக நிறுவனம் 1980ம் ஆண்டு இந்திய பங்கு வர்த்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் கல்கத்தா பங்குச் சந்தை (CSE)-யின் கீழ் பதிவு செய்திருந்தது.
2001ம் ஆண்டு நடைபெற்ற கேதன் பரேக் மோசடி என்று வர்ணிக்கப்படும் பங்குச் சந்தை மோசடிக்கு 1997ம் ஆண்டு கணினிமயமான CSEயும் அதன் C-STAR மென்பொருளும் ஒரு காரணம் என்று அறிக்கை வெளியானதை அடுத்து மூடப்பட்ட கல்கத்தா பங்குச் சந்தை சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்கியது.
பின்னர், 2013ம் ஆண்டு செபி மேற்கொண்ட நடவடிக்கைகளால் CSE இல் வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.